Please enable javascript.police says 16 years back madras ambedkar law college fight may also a reason in armstrong murder: 16 ஆண்டுகளுக்கு முன்பு அதிர்ந்த சட்டக்கல்லூரி.. இன்று கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்.. மிரண்ட போலீஸ்

16 ஆண்டுகளுக்கு முன்பு அதிர்ந்த சட்டக்கல்லூரி.. இன்று கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்.. மிரண்ட போலீஸ்

Authored byஜே. ஜாக்சன் சிங் | Samayam Tamil 6 Jul 2024, 2:10 pm
Subscribe

16 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் தென் மாவட்டங்களில் பெரும்பான்மையாக இருக்கும் ஒரு குறிப்பிட்ட சமூகததைச் சேர்ந்த மாணவர்கள் தாக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஆம்ஸ்ட்ராங் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். தற்போது அவர் கொலை செய்யப்பட்டதற்கு பின்னால் இந்த சம்பவமும் இருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

armstrong
சென்னை: தமிழக பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், போலீஸ் தரப்பில் ஒரு முக்கியமான விஷயம் பேசப்பட்டு வருகிறது. 16 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சட்டக்கல்லூரியில் நடந்த ஒரு அதிரடி சம்பவத்துக்கு பழிக்குப்பழியாக இந்த சம்பவம் நடந்திருக்குமா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று பெரம்பூரில் உள்ள தனது வீட்டருகே கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் நிரம்பியிருக்கும் அந்தப் பகுதிக்குள் புகுந்து 8 பேர் கொண்ட கும்பல் அவரை படுகொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு கட்சியின் மாநிலத் தலைவரே கொலை செய்யப்பட்டது தமிழகம் முழுவதும் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆம்ஸ்ட்ராங் கொலையை கண்டித்து மாநிலம் முழுவதும் தலித் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இது ஒருபுறம் இருக்க, ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். கடந்த ஆண்டு சென்னையில் நடந்த ரவுடி ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழி வாங்கும் விதமாக இந்த கொலையை தாங்கள் செய்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். ஆனால், இவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்றும், இந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், போலீஸ் வட்டாரத்தில் இதுபற்றி கேட்கும் போது சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு 2008-ம் ஆண்டு சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் ஒரு பயங்கர சம்பவம் நடந்தது. அந்த ஆண்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் சிலர், கல்லூரி விழா தொடர்பாக துண்டறிக்கைகளை விநியோகித்தனர். அதில் அம்பேத்கர் சட்டக்கல்லூரி என்பதற்கு பதிலாக வெறுமென சென்னை சட்டக்கல்லூரி என இருந்துள்ளது. தென் மாவட்டங்களை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள், வேண்டுமென்றே அம்பேத்கர் பெயரை தவிர்த்ததாக தகவல் வெளியாகியது.

இதனை மற்றொரு தரப்பு சட்டக்கல்லூரி மாணவர்கள் தட்டிக் கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட சமூக மாணவர்கள் பயங்கரமாக தாக்கப்பட்டனர். கிரிக்கெட் மட்டை, இரும்பு கம்பி, டியூப் லைட் போன்றவற்றால் அவர்கள் தாக்கப்பட்டனர். சில வெளிநபர்களும் இந்த தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த காட்சிகள் அந்த சமயத்தில் சில தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பாகி பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இந்த சம்பவத்தில் இரண்டாம் குற்றவாளியாக ஆம்ஸ்ட்ராங்கின் பெயர் சேர்க்கப்பட்டது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அவருக்கு வழங்கப்பட்டது.

ஆனால், நேரில் பார்த்த சாட்சிகள் பிறழ் சாட்சியங்களாக மாறியதால் ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு பழிவாங்கும் விதமாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரது ஆதரவாளர்கள் பலர் தெரிவிக்கின்றனர். எனவே, இந்தக் கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
ஜே. ஜாக்சன் சிங்
எழுத்தாளர் பற்றி
ஜே. ஜாக்சன் சிங்
நான் ஜா.ஜாக்சன் சிங். 12 ஆண்டுகள் ஊடகத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். களத்தில் செய்தி சேகரித்த அனுபவமும் உண்டு. தேசிய, சர்வதேச செய்திகளில் ஆர்வம் அதிகம். தமிழக அரசியல் செய்திகளிலும் ஈடுபாடு கொண்டவன். எளிமையாகவும், சுவாரசியமாகவும் மொழிபெயர்ப்பதில் விருப்பம. இப்போது Times Of India சமயம் தமிழில் Digital Content Producer ஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்