ஆப்நகரம்

அடிமை காட்டுமிராண்டிகளின் வழிக்காட்டி: பெரியார் எனும் உணர்வு பிறந்து 140 வருடமாச்சு!

பெரியார் என்பவர் இயக்கமல்ல.. உணர்வே.. காலங்கள் கடந்து உணர்வுகளால் கடத்தப்பட்டுக் கொண்டே இருப்பவன்..

Samayam Tamil 17 Sep 2019, 9:52 am
நான் முட்டாள் தான்.. ம்.ம். நான் அயோக்யன்.. அதனால உனக்கு என்ன.. உனக்கு என்னனு கேட்கிறேன்.. நான் சொல்வதுல்ல எது உனக்கு சரினு படுதோ அத மட்டும் எடுத்துக்கோ.. மற்றத தூக்கிபோடு.. பெரும்பாலும் இந்த வரிகள் இடம்பெறாமல் பெரியாரின் மேடை பேச்சுக்கள் இருந்திருக்காது.
Samayam Tamil images


மூத்திரப் பையைக் கையில் பிடித்துக் கொண்டு தனது சுயநலத்துக்காக வாழ்க்கையின் இறுதிக் காலம் வரை மேடை ஏறிப் பேசி வந்தவர். ஆம் சாதிப் பாகுபாடின்றி, மத பிரிவினை ஏதுமில்லாமல், இரு பாலினங்களும் சம உரிமையுடன் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப வாழ வேண்டும் எனப் பெரியார் ஆசைப்பட்டார். இந்த கனவு தான் உயிரோடு இருக்கும்போது நடக்காது என்பதையும் உணர்ந்திருந்தார். எனினும், தனது கற்பனையிலிருந்த சமூகத்தை உருவாக்கவே சுயநலத்துடன் பெரியார் அப்படிச் செய்து வந்திருக்கிறார்.

ஈரோட்டில் 1879 ஆம் ஆண்டு, இன்றிலிருந்து சரியாக 140 வருடத்துக்கு முன் பிறந்தவர் பெரியார். தேவைக்கு ஏற்ப வசதியுடன் வாழ்ந்து வந்த பெரியார் தன்னை சுற்றி நடக்கும் விஷயங்கள் குறித்து ஏன் இது இப்படி நடக்கிறது என வெளியே பிறரிடம் கேட்பதோடு முடித்துக் கொள்ளாமல் தன் மனதிலும் கேட்டுக்கொள்வார். தீவிரமாக அதைப் பற்றிச் சிந்திப்பார். அதுகுறித்து விவரம் தெரிந்தவர்களிடம் விவாதிப்பார். முடிவுக்கு வருவார்.

பெரியார் தனது நிலைப்பாட்டிலிருந்து மாறியதே இல்லை எனச் சிலர் கூறி வருவது தவறு மேடைகளிலே, அவரின் பழைய நம்பிக்கை குறித்தும், அதை ஏன் மாற்றிக் கொள்கிறார் என்பதையும் தெளிவாக விளக்கி கருத்துக்கு வலு சேர்ப்பார். பெரியார் மேடைகளில் பேசிய உறைகளின் ஓட்டு மொத்த நீலம் 21 ஆயிரத்து 400 மணி நேரமாகும். இவர் மக்களை நோக்கி மேற்கொண்ட பயண நாட்கள் 8 ஆயிரத்து 200 எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

பெரியார் குறித்த விவாதங்கள் சமீப காலமாக, அதுவும் 10 வருடங்களாக அதிகளவில் இருப்பதாகச் சிலர் கூறுகிறார்கள். இது முரணானது. கொள்கை ரீதியாக முரண்பட்டவர்கள்கூட பெரியாரின் எளிமையால் ஈர்க்கப்படுவார்கள்.

இப்போதைய சூழலில் திராவிட கருத்துக்களைப் பேசுபவர்கள் பெரும்பாலும், ஊருக்கு உபதேசம் செய்துவிட்டு வீட்டில் சுயசாதி பெருமை பேசுவதும், மத பண்டிகை, மதச் சடங்குகள் எனப் பலவற்றைப் பின்பற்றுபவர்களாகவே இருந்து வருகிறார்கள். பெரியார் அப்படியல்ல,தனது மனைவி மற்றும் சகோதரியை அரசியலுக்குள் கொண்டு வந்தவர்.

பெரியார் எனும் சகாப்தம் உருவாகியது காசியில்தான். ஆம், பெரியாரின் இளமைக் காலத்தில் திருமணத்துக்குப்பின் நம்மில் பெரும்பாலானவர்கள் கற்பனையில் வைத்திருப்பதுபோன்ற ஒரு வாழ்க்கை கிடைத்திருக்கிறது. ஆனால், அந்த சமயத்தில் பெரியார் துறவு செல்வதே சரி என முடிவு செய்தார். காசிக்குச் சென்றார். பல சத்திரங்களுக்கு உணவுக்காகச் சென்றார். அப்போதைய சூழலில், பிராமணராக இல்லாதவரை மண்டபத்துக்கு உள்ளே அனுமதிக்கப் போவதில்லை என்பதை உணர்ந்து கொண்டார்.

வழியில்லாமல் எச்சில் இலைகளிலிருந்த உணவுகளை உட்கொள்ள வேண்டிய நிலை. அதையும் செய்தார். பின் துறவு எதற்கும் பயனில்லை என ஊர் திரும்பினார். சொந்த ஊரான ஈரோட்டில் பொதுப் பணிகளைச் செய்யத் தொடங்கினார்.

சுதந்திரப் போராட்ட விராக தொடக்கத்தில் காந்தியுடன் சேர்ந்து பயணித்த பெரியார். சில சமூக நீதி போராட்டங்களுக்காக, காந்தி சொன்னவற்றை ஏற்க முடியாமல் தனது முக்கிய பொறுப்புகளையெல்லாம் துறந்துள்ளார். ஒரு கட்டத்தில் காந்தியையும், காங்கிரசையும் விட்டு விலகியும் வந்தார். சுதந்திரம் கிடைக்க போகிறது என்ற சமயத்தில் அதை பெறுவதுக்கு பெரியாருக்கு விருப்பமில்லை. நாட்டில் உள்ள பாகுபாடு தீர்க்கப்பட்டப்பின் சுதந்திரம் கிடைக்கட்டும் என்றார். இப்போதுவரை இந்த கருத்தை பலர் ஏற்க மறுக்கிறார்கள். திராவிட நாடு என்ற எண்ணத்தையும் பெரியார் அப்போது வைத்திருந்தார். திராவிட நாடு குறித்து பாகிஸ்தானை உருவாக்கிய முஹமது அலி ஜின்னாவிடம் விவாதித்து வந்தவர்.

பெரியார் குறித்த கருத்தாக்கங்களுக்கு மத்தியில் பரவலாகக் கூறப்படுவது இந்து மத விரோதி என்பதே. பெரியார் அனைத்து மதங்களையும் வெறுக்கவே செய்தார். புத்த மதத்தில் கூறப்பட்டுள்ள சில விஷயங்களைக் கொள்கையாக மட்டுமே ஏற்றுக் கொண்டார். இந்து மதத்தின் மீது பெரியார் கொண்ட கோபம் வேதங்களிலிருந்து தொடங்குகிறது. வேதம் கூறுவதால், சாதிப் பிரிவினை வருவதை ஒருபோதும் பெரியாரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. நாட்டில் அதிகளவில் வாழ்ந்த மதம் என்பதாலே இந்து மதம் ஒழிய வேண்டும். ஏற்றத்தாழ்வு நீங்க வேண்டும் என்பதை விரும்பினார்.


இப்போதும் பல இடங்களில், கடவுள் சிலைகளை உடைத்தவர் பெரியார் எனத் தவறான குற்றச்சாட்டை வைக்கிறார்கள். இது சான்றே இல்லாதது. விநாயகர் சதுர்த்தி முடிந்தவுடன், சம்பந்தப்பட்ட விநாயகர் சிலைகள் கடலில் அல்லது ஏதோ ஒரு நீர் நிலைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுக் கரைக்கப்படும். இதையே பெரியார் நீரில் போவது, மண்ணோடு மண்ணாகப் போகட்டும் என விநாயகர் சிலை ஒன்றைச் செய்து அதை அவரே உடைத்தார். இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்தபோதும், இந்த விவகாரத்தில் எந்த தவறும் இல்லை என ஊருக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

பெரியார் ஏன், எதுக்கு, என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டே இருக்கும்படி வலியுறுத்துவார். அப்படி நாம் செய்வதால், நம் அறிவு வளரும், நம் சிந்தனை ஆற்றல் பெருகும் என்பதாலே. பெரியார் என்பவரும் அவர் கூறிய கருத்துக்களும், கொள்கைகளாகவோ கோட்பாடுகளாகவோ தூக்கிப் பிடிக்க அவசியம் என்றுமே ஏற்படாது. பெரியார் என்பது உணர்வு. பெரியார் என்பதே விவாதப் பொருள். எதற்கும் விடையாகப் பெரியார் என்ற பெயர் அமையப்போவதில்லை. சொல்லப்போனால் அவர் மீது செருப்பை எறிந்தாலும், இன்னொரு செருப்பு அவரை தேடி வரும்வரை சம்பந்தப்பட்ட இடத்திலிருந்து அவர் செல்ல மாட்டார். ஒரு செருப்பை வைத்து யாருக்குத்தான் பயன் எனக் கூறுவார்.

பெரியாரின் பார்வை கூர்மையானது. பரந்து விரிந்தது. எந்த ஒரு எதிர்ப்பையும், மாற்றுக் கருத்தையும் ஏற்காமல் இருக்கமாட்டார். நிதானமாக, கருத்தை வைத்து விவாதத்தைத் தொடங்குவார். மனிதராய் வாழ்ந்தவர்களில் உயர்ந்த சிந்தனை கொண்டு நம்மை வழிகாட்டியதாலே அவர் பெரியார் என அழைக்கப்படுகிறார். பெரியாரின் கருத்துக்களை முன்னெடுக்கும் அனைவருக்கும் இந்த குணங்கள் இருந்தால் மட்டுமே பெரியாரின் கனவுகள் நனவாக நடைபோடத் தொடங்கும்.

அடுத்த செய்தி