ஆப்நகரம்

எல்லா கிராமங்களுக்கும் பேருந்து சேவை : ஜி.கே.வாசன் வைத்த கோரிக்கை - முன்னெடுக்குமா தமிழக அரசு?

அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதிகளை ஏற்படுத்தி, பேருந்துகளை இயக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Authored byஎழிலரசன்.டி | Samayam Tamil 3 Jul 2024, 6:08 pm
தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களுக்கும் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பேருந்துகள் செல்ல முடியாத கிராமங்களில் மினி பஸ் சேவையை கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதே சமயம் சாலை வசதிகளை நன்றாக ஏற்படுத்தி தரமான அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
Samayam Tamil Govt Bus Gk Vasan


இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில், “பல மாவட்டப் பகுதிகளில் சாலைகள் பழுதடைந்துள்ளன. இதனால் போக்குவரத்தில் சிரமம் ஏற்படுவதோடு, விபத்துகளும் நிகழ்கின்றன. மேலும், மக்களின் பயணத்தில் காலதாமதம் ஏற்படும் சூழல் உண்டாகியுள்ளது” என்று தெரிவித்தார்.

குறிப்பாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள பல கிராமப்புற பகுதிகளுக்கு இன்னும் சாலை வசதியும், அரசுப்பேருந்து வசதியும் முழுமையாக இல்லை என்று குறிப்பிட்ட ஜி.கே.வாசன், “இதன் காரணமாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்காக செல்லும் மக்கள் பேருந்து வசதியின்றி நடந்து செல்ல வேண்டிய சூழல் உண்டாகியுள்ளது” என்றார்.

தொடர்ந்து, “எத்தனை பேர் வசிக்கும் ஊராக இருந்தாலும் அனைத்துப் பகுதிகளுக்கும் சாலை வசதி ஏற்படுத்தி, அரசுப்பேருந்துகளை இயக்க வேண்டும். ஆனால் பல ஊர்களுக்கு இன்னும் பேருந்து இயக்கப்படவில்லை என்று மக்கள் குறை கூறுகின்றனர். இப்படி மாநிலத்தில் பல பகுதிகளில் பழுதடைந்த சாலை, சாலையில்லாத, பேருந்து வசதியில்லாத நிலை ஆகியவற்றால் அனைத்து தரப்பு மக்களுக்குமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

அதிவேக பயணம், பழுதடைந்துள்ள அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவது, படிக்கட்டில் பயணம் செய்வதால் விபத்துகள், காயமடைதல், உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்ந்து வருகிறது. ஆகவே, மாநிலம் முழுவதும் சாலைகளை செப்பனிடவும், புதிய சாலைகள் அமைக்கவும், தரமான அரசுப் பேருந்தை இயக்கவும் காலம் தாழ்த்தாமல் கணக்கெடுப்பை நடத்தி சாலை இல்லாத ஊரில்லை, அரசுப்பேருந்து இயங்காத கிராமப்புறம் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

மேலும், “தமிழகத்தில் அரசுப் பேருந்து கழகங்களை அரசே நடத்தி, போக்குவரத்துக் கழக ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அரசுப் போக்குவரத்துக் கழகங்களை லாபகரமாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
எழுத்தாளர் பற்றி
எழிலரசன்.டி
நான் எழிலரசன். கடந்த 8 ஆண்டுகளாக டிஜிட்டல் ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சமூகம் சார்ந்த செய்திகள், கட்டுரைகள் பலவற்றை எழுதியுள்ளேன். தற்போது சமயம் தமிழ் இணையதளத்தில் Digital Content Producer - ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி