ஆப்நகரம்

குடும்ப விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து.. உயிரோடு எரிக்கப்பட்ட விசிக பிரமுகர்

மனைவியிடம் இருந்து பிரிந்து வாழும் தனது உறவினரை அழைத்து தாக்கி கட்டப்பஞ்சாயத்து செய்த விசிக பிரமுகரை அவரது உறவினர் உயிரோடு எரித்தார்.

Authored byஜே. ஜாக்சன் சிங் | Samayam Tamil 1 Jul 2024, 11:19 pm
கள்ளக்குறிச்சி: குடும்ப பிரச்சினையில் கட்டப்பஞ்சாயத்து செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரை அவரது உறவினர் உயிரோடு எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil vck


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சூசைநாதன். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சமூக நல்லிணக்க பேரவையில் மாவட்ட அமைப்பாளராக இருந்து வருகிறார்.

இதனிடையே, நேற்று முன்தினம் இரவு, தனது குடும்பத்தினருடன் வீட்டிற்கு வெளியே சூசைநாதன் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், சூசைநாதனனின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து ஓடினார். உடலில் தீப்பற்றிய சூசைநாதன் அங்குமிங்கும் அலறியடித்துக் கொண்டு ஓடினார். இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் அவர் மீது இருந்த தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் அவரது உடல் முழுவதும் தீயால் வெந்து போனது. இதனைத் தொடர்ந்து அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கவலைக்கிடமான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, சூசைநாதனின் உறவினரான சின்னத்தம்பி என்பவரே இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. அதாவது, சின்னத்தம்பிக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மனைவிக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி சின்னத்தம்பி தனியாக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், சின்னத்தம்பியின் மனைவி தன்னிடம் வந்து கேட்டுக்கொண்டதால், சூசைநாதன் அவர்கள் குடும்பப் பிரச்சினையில் கட்டப்பஞ்சாயத்து செய்ய தொடங்கினார். ஒருகட்டத்தில், சின்னத்தம்பியை அழைத்து சரமாரியாக அடித்து உதைத்து, ஒழுங்காக மனைவியுடன் சேர்ந்து வாழுமாறு சூசைநாதன் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் அவமானம் அடைந்த சின்னத்தம்பி, சூசைநாதனை பழிவாங்கும் சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தார். அதன்படி, நேற்று முன்தினம் வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் தனது குடும்பத்தினருடன் சூசைநாதன் வெளியே படுத்து தூங்கியுள்ளார். இதை பார்த்த சின்னத்தம்பி, பெட்ரோலை எடுத்து வந்து சூசைநாதன் மீது ஊற்றி தீ வைத்து ஓடியுள்ளார். இதனை வாக்குமூலமாக அளித்த சின்னத்தம்பியை போலீஸார் கைது செய்தனர்.
எழுத்தாளர் பற்றி
ஜே. ஜாக்சன் சிங்
நான் ஜா.ஜாக்சன் சிங். 12 ஆண்டுகள் ஊடகத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். களத்தில் செய்தி சேகரித்த அனுபவமும் உண்டு. தேசிய, சர்வதேச செய்திகளில் ஆர்வம் அதிகம். தமிழக அரசியல் செய்திகளிலும் ஈடுபாடு கொண்டவன். எளிமையாகவும், சுவாரசியமாகவும் மொழிபெயர்ப்பதில் விருப்பம. இப்போது Times Of India சமயம் தமிழில் Digital Content Producer ஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி